Monday 30 January 2012

முல்லாவின் அறிவாற்றல்

முல்லா நல்ல அறிவாளி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் தமது அறிவாற்றலினாலேயே அந்த ஆபத்திலிருந்து தப்பி விடுவார் என்றும் ஊரில் உள்ளவர்களில் பலர் கூறுவது மன்னரின் காதில் விழுந்தது.

அவரது அறிவாற்றலைப் பரிசோதிப்பதற்காக மன்னர் ஒரு நாள் முல்லாவை தமது சபைக்கு வரவழைத்தார்.

முல்லா வந்து வணங்கி நின்றார்.

" முல்லா உனது அறிவைப் பரிசோதனை செய்ய நினைக்கிறேன், நீங்கள் ஏதேனும் ஒன்றைக் கூறும், நீர் சொல்வது உண்மையாக இருந்தால் உமது தலை வெட்டப்படும், நீர் சொல்வது பொய்யாக இருந்தால் நீர் தூக்கில் ஏற்றப்படுவீர் " என்றார் மன்னன்.

முல்லா உண்மை சொன்னாலும் பொய்யை சொன்னாலும் அவர் உயிருக்கு ஆபத்து தயாராக இருக்கிறது. முல்லா நிலமையை எவ்வாறு சமளிக்கபோகிறார் என்று சபையோர் அவரையே கவனித்தனர்.

முல்லா மன்னனை நோக்கி " மன்னர் அவர்களே தாங்கள் என்னை தூக்கில் போடபோகிறீர்கள்" என்று பதற்றம் ஏதுமின்றிக் கூறினார். அதைக் கேட்ட மன்னர் திகைப்படைந்தார்.

முல்லா சொன்னது உண்மையானால் அவருடைய தலை வெட்டப்பட வேண்டும் அவ்வாறு வெட்டப்பட்டால் அவர் கூறியது பொய்யாகிவிடும்.

முல்லா கூறியது பொய் என்று வைத்துக் கொண்டால் முல்லாவைத் தூக்கில் போடவேண்டும். தூக்கில் போட்டால் அவர் கூறியது உண்மை என்று ஆகிவிடும். உண்மை எனக் கருதினால் அவரைத் தூக்கில் போடாமல் கழுத்தை வெட்ட வேண்டும். இப்படி ஒரு குழப்பத்தை தமது அறிவாற்றலால் தோற்றுவித்து முல்லா மன்னனைத் திக்குமுக்காடச் செய்து விட்டார்.

அவரது அறிவாற்றலைக் கண்ட மன்னன் மிகவும் மகிழ்ச்சியடைந்து பொன்னையும் பொருளையும் பரிசாகக் கொடுத்து அனுப்பினான். 

No comments:

Post a Comment